நாகர்கோவில், திருச்சி விரைவு ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்
கோவை-நாகர்கோவில், திருச்சி-பாலக்காடு ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.;
கோவை,
கோவையில் இருந்து தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்கு முன்பு வரை திருச்சி-பாலக்காடு, கோவை-நாகர்கோவில் பகல் நேர ரெயில்கள் மற்றும் கோவை-சேலம் மெமு ரெயில் ஆகிய ரெயில்கள் இருகூர் நிலையத்தில் நின்று சென்றன. இதனால் இருகூர் மற்றும் இருகூரை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பணி நிமித்தமாக வெளியூர் செல்வோர் மிகவும் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இந்த ரெயில்கள் இருகூரில் நிற்பது நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் திருச்சி-பாலக்காடு, கோவை-நாகர்கோவில் ரெயில்கள் இருகூரில் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இருகூர் ரெயில் பயணிகள் மற்றும் பிற ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோவை-நாகர்கோவில், திருச்சி-பாலக்காடு ரெயில்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் சிங்காநல்லூர், இருகூர் நிலையங்களில் நின்று செல்லும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இருகூர், சிங்காநல்லூர்
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி-பாலக்காடு டவுன் விரைவு ரெயில் (வண்டி எண்:- 16843), பாலக்காடு டவுன்-திருச்சி விரைவு ரெயில் (எண்:- 16844), நாகர்கோவில்-கோவை விரைவு ரெயில் (எண்:-16321), கோவை -நாகர்கோவில் விரைவு ரெயில் (எண்: 16322) ஆகிய ரெயில்கள் சிங்காநல்லூர், இருகூர் ரெயில் நிலையங்களில் நாளை முதல் நின்று செல்லும். இதேபோல் கோவை-நாகர்கோவில் ரெயில், நாகர்கோவில்-கோவை ரெயில் மேலப்பாளையம், ஆரல்வாய்மொழி ஆகிய ரெயில் நிலையங்களிலும் நாளை முதல் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இருகூர், சிங்காநல்லூர் ரெயில் பயணிகளிடையே இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, இருகூர் ெரயில் பயணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வடிவேலு கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், இந்த ரெயில்கள் இருகூரில் நிறுத்தப்படுவது மகிழ்ச்சி. இதேபோல் கோவை-சேலம் மெமு ரெயிலையும் மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனறார்.