சென்னையில் வேளாண் வணிக திருவிழா: 27-ம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
2025-26ம் ஆண்டிலும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.;
சென்னை,
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரத் தொழிலாக உள்ள வேளாண்மை, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலன் ஆகியவற்றினை உயர்த்திடும் நோக்கத்தில், தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மைக்கென ஐந்து தனி நிதி நிலை அறிக்கைகளை சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு உழவர் நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. 2025-26ம் ஆண்டிலும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரித்தல், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்பத்தியாளர்கள்- வணிகர்கள் சந்திப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டின் 2-வது நிகழ்வாக “வேளாண் வணிகத் திருவிழா-2025 ”நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் 27.09.2025 மற்றும் 28.09.2025 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட உள்ளது.
இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேளாண் வணிகத் திருவிழா 2025-ஐ மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ம் தேதி தொடங்கி வைத்து, உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த விழாவில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்கரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்,
பட்டு வளர்ச்சித்துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் மற்றும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இவை தவிர, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் இசைந்துள்ளனர்.
சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகம். பனை, தென்னை, ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் நல சேவை மையங்கள், நகர்ப்புரத் தோட்டம், செங்குத்துத் தோட்டம்,
நீர்ஊடகத் தோட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை, பாரம்பரிய காய்கறிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள். தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, எண்ணெய் செக்கு இயந்திரம், பருப்பு உடைக்கும் இயந்திரம் போன்ற மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான விவரங்கள் போன்ற அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும்.
உழவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், உணவே மருந்து, நகர வாழ்க்கையில் ஆரோக்கிய உணவு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரிவிகித உணவு, உணவு பதப்படுத்துதலும் மதிப்புக்கூட்டுதலும், காய்கறி சாகுபடி முறைகள் மற்றும் மாடித்தோட்டம் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மை, சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல், வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல், உழவர்களுக்கான மின்னணு சந்தைப்படுத்துதல்,
சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள்), வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், சிறந்த விவசாயிகள் நடைமுறைகள், நஞ்சில்லா வேளாண்மை, போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்படும். இதுதவிர முன்னணி வேளாண் தொழில் முனைவோருடன் கலந்துரையாடலும் நடைபெறும். இக்கருத்தரங்குகளில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற வேளாண் தொழில்சார் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளில் தங்களது மதிப்புக்கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், மூலிகை உணவுப் பொருட்கள், பழங்கள், பசுமைக் காய்கறிகள், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், காய்கறி விதைகள், உயர் இரக பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் போன்ற பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விற்பனையும் மேற்கொள்வார்கள்.
மேலும், வேளாண் விளைபொருட்கள் விற்பனை, சந்தைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியினை மேம்படுத்துவதற்காக, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புக்கூட்டும், பதப்படுத்தும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் வணிகர்கள் சந்திப்பும் நடைபெறும்.
வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு அருகாமையிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
வேளாண் வணிகத் திருவிழா 2025-ல் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.