தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி 5.66 சதவீதமாக உயர்வு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை
வேளாண் விளைப்பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டம் வந்தால், அது அரசின் நெஞ்சுரத்திற்கான சாதனை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.;
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து விபரமான ஒரு பெருமித அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு அனைத்து ஊடகச்செய்திகளிலும் வந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் அமலாக்கத்துறையானது, 2024-2025-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வேளாண்மை 0.09 சதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் உள்ளீடுகளை அறிவோம். மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு தனியாக தாக்கல் செய்து வந்த ரெயில்வே பட்ஜெட்டையே பொது நிதிநிலை அறிக்கையோடு சேர்த்துவிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசோ 2001-ல் பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருவதை பாராட்டி வருகிறோம்.
தமிழக வேளாண் திட்டங்களுக்கு உரிய நிதி பங்கீடு, தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை இடர்பாட்டிற்குரிய பேரிடர் நிதி, வழக்கமான பங்கீட்டு நிதி போன்ற பல நிதி பங்கீட்டை ஒன்றிய அரசு வழங்காத நிலையிலும் பல திட்டங்களை வேளாண்மையில் நடைமுறைப்படுத்தி உள்ளதை வரவேற்கிறோம். இந்த நிலையிலும் ஐந்து வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் கூடுதல் 1,94,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில பயிர்கள் பிற மாநிலங்களை விட கூடுதல் உற்பத்தியை எட்டியுள்ளது. 88 தடுப்பணைகள் கட்டப்பட்டதற்கு பாராட்டு. வேளாண்மை வளர்ச்சி 1.36 சதவீதத்திலிருந்து தற்போது 5.66 சதவீதமாக உயர்வு என்பது சிறப்பு.
இந்த வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானம் உயர்வு ஏற்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். சராசரி ஒரு ஊராட்சியில் 4 ஏக்கருக்கும் மேல் கூடுதல் சாகுபடி பரப்பும், சராசரி ஒரு ஊராட்சியில் 500 புதிய விவசாயிகள் வந்துள்ளதாகவும் மாநில அரசின் அறிக்கையில் உள்ளது. இது எப்படி என அறிய முடியவில்லை. அரசு அலுவலர்கள் தரும் புள்ளிவிபரம் என்பது, இணையவழி தகவல் குறிப்புகளை பார்த்தாலே தெரியும். அரசின் புள்ளி விபரம் என்பது ஒரு கட்டுச்சோறு. வடித்த சோற்றில் தான் தெரிய வரும் அதன் வளமையும் வனப்பும்.
வளர்ச்சி என்பது விவசாயிகளின் வருமானத்தில், வாழ்வில், வளத்தை உயர்த்தி இருக்க வேண்டும். வேளாண்மை வளர்ச்சி என்றால் விவசாயிகள் வருமானமும் அந்த ஒப்பீட்டில் உயர்ந்திட வேண்டும். அப்படி இல்லையே. பேரிடர் பாதிப்பு, மகசூல் உற்பத்தி இழப்பு, விற்பனையின் போது லாபம் இழப்பு, வட்டிச்சுமை, இடுப்பொருள்கள் விலை உயர்வு, கூலி மற்றும் இயந்திரங்களின் வாடகைஉயர்வு ஆகியவைகள் ஆண்டுக்காண்டு உயர்கிறது. இதற்கேற்ப வருவாய் உயர்வு இல்லை.
இந்த சூழலில் தான் வேளாண்மையில் சாதனை. ஆனால் விவசாயிகளுக்கோ தொடரும் வேதனை.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை 0.09 சதம் தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த குறிப்பிட்ட ஆண்டில் மேட்டூர் அணை காலம் தாழ்ந்து திறக்கப்பட்டது. இதனால் 6 லட்சம் ஏக்கர் வழக்கமான குருவைசாகுபடி, 3 லட்சம் ஏக்கராக குறைந்தது. பின்னும் மூன்று தடவை தண்ணீர் இல்லாமல் போனது. மழை வெள்ளம் ஏற்பட்டு பெருமளவு பாதித்தது. இதனால்தான் வழக்கத்தை விட வேளாண்பயிர் உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டது. இதை புள்ளியல் துறையும் தெரிவித்துள்ளது. ஆனாலும் பயிர் துறையை தவிர்த்து, பிறவகை வேளாண்மையில் வளர்ச்சி விகிதம் கூடியுள்ளது. இதனால்தான் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 9.69 சதம் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
வேளாண்மையில் தமிழக அரசின் சாதனையை பாராட்டலாம். ஆனால் இந்த வளர்ச்சி விவசாயிகளின் வாழ்வில் ஏற்பட்டிருக்கிறதா என்றால், வேளாண்மை வளர்ச்சிக்கு ஏற்ப இது இல்லை என்பதே உண்மை. 1960-ம் ஆண்டு வரை நுகர்வோர்களும், உற்பத்தியாளர்களும் ஆண்டு முழுவதும் உணவு கிடைக்காமல் பட்டினியில் உயிர் துறந்தனர். 1960க்கு பின் விவசாயிகள் பசுமைப் புரட்சி மூலம் பாடுபட்டு இந்திய நாட்டு மக்களின் பட்டினியை போக்கினர். 1990க்கு பின் உலக வர்த்தக உடன்பாட்டை ஏற்றுக் கொண்ட இந்திய அரசுக்கு, அந்நிய செலாவணியை இந்திய நாட்டுக்கு பெற்றுக் கொடுக்க விவசாயிகள் உழைத்து உற்பத்தியை மேலும் உயர்த்தினர்.
ஆனால் இதுவரை விவசாயிகள் தனக்காக உழைத்திடவே இல்லை. இதனால் விவசாயிகளின் தற்கொலைகள் தான் நீண்ட பட்டியலாகிறது. இந்நிலையில் தான் 2018-ல் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின், எங்கள் ஆட்சியில் வேளாண் உற்பத்தி மும்மடங்கு, விவசாயிகளின் லாபம் இரு மடங்கு ஆக்குவோம் என்று முழங்கினர். உரிய லாபம் இல்லை என ஒரு வகையில் இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்படி சொன்னவரே இருப்பதையும் பறிக்கவே புதிய வேளாண் 3 சட்டங்களை கொண்டு வந்தார். இனி நிலத்திலிருந்து வெளியேறிடும், வெளியேற்றப்படும் விவசாயிகளை நிலைப்படுத்த அதற்கான லாபம் தரும் திட்டமிடலை மட்டுமே அரசாங்கங்கள் செய்திட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கான அரசாக இவைகள் சாதனை பெறும்.
ஆட்சிக்கு வந்திட குவிண்டால் நெல் ரூ.2,500 கரும்பு டன் ரூ.3,000 விலை கொடுப்போம் என அறிவித்து, ஐந்தாண்டு கடந்தும் கொடுக்காத நிலையில், நெல் குவிண்டால் ரூ.3,000 கரும்பு டன் ரூ.4,500 கொடுத்திருந்தால் அது வேதனைகளிலும் ஒரு சாதனை. முட்டு வலி செலவுக்கு கூட, தான் விளைவித்த வேளாண் பொருட்களுக்கு விலை கிடைக்கலையே என அவைகளை சாலையில் கொட்டி அழுகிறானே விவசாயி. அந்த நேரங்களிலாவது அரசு அவைகளை கொள்முதல் செய்து இருந்தால் அது சாதனை. வேளாண் கமிஷன் பரிந்துரைப்படி விளைவித்தப் பொருட்களுக்கு லாபகரமான விலை, உத்தரவாத கொள்முதல் சட்டம் அமல்படுத்தி இருந்தால் அது சாதனை.
தனியார் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகள் மற்றும் அரசுகள் செலுத்தும் பிரிமியத் தொகையை கொள்ளை கொள்ளும் திட்டத்தை தவிர்த்து அரசின் பொதுத்துறை திட்டமாக அமுல்படுத்திருந்தால் அது சாதனை. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட, வெள்ளக்கால மிகு நீரை சேமித்திட உரிய நீர் இருப்பு நிலைகளை அமைத்திருந்தால் அது சாதனை. இயற்கையின் கொடையான மலைகளும் மணல் திட்டுக்களும் கொள்ளை போகாது தடுத்து பாதுகாத்திருந்தால் அது சாதனை. ஒதுக்கிய நிதி முழுவதையும் உள்ளூர் விவசாயிகளைக் கொண்டு தூர்வாரி இருந்தால் அது அரசை ஆராதிக்கும் சாதனை.
தொழில் நுட்பக்குழு மற்றும் நபார்டு பரிந்துரைப்படி விவசாயிகள் அனைவருக்கும், பயிர் பரப்பளவு முழுவதுக்கும் அறிவிக்கப்பட்டபடி பயிர் கடன்தொகை வழங்கப்பட்டிருந்தால் அது நேர்மையின் சாதனை. காலத்திற்கு ஏற்ப, வேளாண் உற்பத்தி செலவுகள் கூடுதலுக்கு ஏற்ப, நிவாரணம் மற்றும் இழப்பீடு தொகையை உரிய அளவு உயர்த்தி வழங்கிட சட்டபூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொண்டு இருந்து நிறைவேற்றி இருந்தால் அது மிகு சாதனை. பிற மாநில அரசுகள் போல் ஒவ்வொரு பருவத்திற்கும் விவசாயிகளுக்கு முதலீட்டு ஊக்க மானியம் ஏக்கருக்கு ரூ.10,000 கொடுத்திருந்தால் அது சாதனைக்கும் சாதனை. வேளாண் விளை நிலங்களை வேறு வகை பயன்பாட்டிற்கு கணக்கின்றி கபளீகரம் செய்வதை, அதற்காகவே கொண்டு வந்த நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கைவிட்டிருந்தால் அது நேர்மையின் சாதனை.
மானாவரி புஞ்சை பயிர்களுக்கு, சிறுதானியப் பயிர்களுக்கு தனி சிறப்பு திட்டங்கள் வகுத்து, உரிய நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் அது அனைவருக்குமான ஊட்டமளிக்கும் சாதனை. வேளாண் விளைப்பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டம் வந்தால், அது அரசின் நெஞ்சுரத்திற்கான சாதனை. இதற்கு மேலே, மேலே காவிரி, பாலாறு, தென்பெண்ணையாறு பிரச்சினைகள் தீர்வு, நதிநீர் இணைப்புத் திட்டங்கள், தடுப்பணைகள், படுக்கை அணைகள், நீர்சேமிப்பு நிலைகள் முழுதும் நிறைவேற்றினால் அது இமாலயச்சாதனை. இவைகள் தமிழக அரசின் செயல் வடிவ திட்டங்களாய் வந்திட வேண்டும். இந்த சரித்திர சாதனையில் எங்கள் சங்கம் பங்கேற்க விரும்புகிறது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.