அஜித்குமார் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றம்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.;
மதுரை:
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார், நகை மாயம் குறித்த புகார் தொடர்பாக காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், இந்த வழக்கில் காவல் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனும் சேர்க்கப்பட்டார்.
மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கடந்த 19-ம் தேதி, கைதான காவலர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செல்வபாண்டி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் கைதான 5 காவலர்களும், குற்றம் சாட்டப்பட்ட காவல் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனும் ஆஜரானார்கள். பின்னர், இந்த வழக்கை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். அங்கு இந்த வழக்கு அக்டோபர் மாதம் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.