முன்மாதிரியான சேவை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றிற்கு "முன்மாதிரியான சேவை விருதுகள்" வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகள் வழங்குவதற்கு தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களில் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்:
இளைஞர் நீதிச் சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015ன் கீழ்-குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
அளவுகோல்களின் விவரங்கள்:
1. பதிவு மற்றும் உரிமம், 2. நிர்வாகம் மற்றும் மேலாண்மை, 3. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, 4. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, 5. கல்வி மற்றும் திறன் மேம்பாடு, 6. குழந்தைகளின் பற்கேற்பு செயல்பாடுகள், 7. உட்புற கட்டமைப்பு, 8. சிறந்த நடைமுறைகள் & சமூக அடிப்படையிலான சேவைகள் இருத்தல் வேண்டும்.
இவ்விருதுக்காக வரவேற்கப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், கருத்துருக்களை 10.8.2025-க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளைரோடு, தூத்துக்குடி- 628003 என்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 0461-2331188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.