இந்தியாவுக்கு பெருமை தரும் அரட்டை
வாட்ஸ்-அப்புக்கு மாற்றாக அதைவிட மேம்பட்ட ஒரு செயலி நம்மிடமே இருக்கிறது.;
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வந்தாலும் இன்னும் அதில் பயன்பாட்டில் இருக்கும் பல செயலிகள், சேவைகள் சுதேசி உருவாக்கத்தில் உள்ளவை அல்ல. அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானதுதான். எடுத்துக்காட்டாக அன்றாட மெயில்களை ஜிமெயில் மூலமாக அனுப்புகிறோம். இதுமட்டுமல்லாமல் ‘சர்ச் என்ஜின்’, யூடியூப், இடங்களை கண்டறிவதற்கான ‘மேப்’ அனைத்துமே வெளிநாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானதுதான். அதுபோல எக்ஸ் தளம் அமெரிக்க கோடீசுவரரான எலான் மஸ்க்குக்கு சொந்தமானது. அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய 3 சமூக வலைதளங்களை இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
இந்த செயலிகளை அதிகமாக மக்கள் பயன்படுத்தும்போது கிடைக்கும் வருவாய் அனைத்தும் அமெரிக்காவுக்குத்தான் செல்கிறது. ஆக நாம் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு வருவாய் ஈட்டித்தருகிறோம். ஆனால் அமெரிக்காவோ இதையெல்லாம் நினைக்காமல் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்ததோடு மட்டுமல்லாமல், இந்திய இளைஞர்கள் அங்கு வேலைக்கு செல்வதற்காக வழங்கப்படும் விசா கட்டணத்தையும் ரூ.88 லட்சம் என்று உயர்த்தி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அண்டை நாடான சீனாவில் அமெரிக்க செயலிகளை பயன்படுத்த தடை இருக்கிறது. உதாரணமாக அவர்கள் வாட்ஸ்-அப்புக்கு பதிலாக விசாட் என்ற உள்நாட்டு செயலியை பயன்படுத்துகிறார்கள்.
துபாயிலும் வாட்ஸ்-அப்புக்கு மாற்றாக போடிம், கோ சாட் போன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில நாடுகளிலும் அந்தந்த நாட்டு செயலிகளையே பயன்படுத்துகிறார்கள். இதுபோல இந்தியாவில் நமக்கென செயலிகள் இல்லையே என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருந்தது. இந்த பெரிய குறையை தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீதர் வேம்புவுக்கு சொந்தமான ஜோகோ நிறுவனம் தீர்த்து வைத்து, ஒவ்வொரு இந்தியனையும் அதிலும் குறிப்பாக ஒவ்வொரு தமிழனையும் நெஞ்சை நிமிர வைத்துள்ளது. வழக்கமாக மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்த பிறகு அதுகுறித்த விவரங்களை அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பவர்பாயிண்ட் மூலமாகத்தான் விளக்கப்படும். ஆனால் இந்தவாரம் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஜோகோ நிறுவனத்தின் ஜோகோ ஷோ பவர்பாயிண்ட் மூலமே விளக்கப்பட்டது. இதை செய்தியாளர்களிடம் காட்டும் முன்பே மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மிகவும் பெருமையோடு இது சுதேசி தயாரிப்பு என்று சொல்லி புளகாங்கிதம் அடைந்தார்.
அந்த சூட்டோடு சூடாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சமூக வலைதளத்தில் ஜோகோ நிறுவனத்தின் அரட்டை மெசஞ்சர் செயலி இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கட்டணமில்லாத, எளிதில் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான சேவையாகும். இது சுதேசி செயலி என்பதால் அனைத்து இந்தியர்களும் இதையே பயன்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆக வாட்ஸ்-அப்புக்கு மாற்றாக அதைவிட மேம்பட்ட ஒரு செயலி நம்மிடமே இருக்கிறது. எக்ஸ், பேஸ்புக்கில் பதிவு செய்யும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் தங்கள் பதிவுகளை இனி அரட்டை செயலியில் வெளியிட்டால் மக்கள் மத்தியில் இது பிரபலமாகும். இதேபோல மத்திய அரசின் சான்ட்ஸ் மெசேஜிங் செயலி உள்ளது. இதனை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அகர முதல எழுத்தெல்லாம் என்பதில் முதல் எழுத்தான ‘அ’ வை வைத்தே தொடங்கி அரட்டை என்ற பெயரில் தூய தமிழில் ஒரு செயலி நமது பயன்பாட்டுக்கு இருக்கிறது. இதேபோல பேஸ்புக், ஜிமெயில், எக்ஸ் உள்பட அனைத்து செயலிகளுக்கும் சுதேசி செயலிகள் அணிவகுத்து வர இருக்கிறது.