சிறுபான்மையினருக்கு மட்டும் கடன் வழங்கப்படுகிறதா? - தமிழக அரசு விளக்கம்
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ரூ.30 லட்சம் வரை தனிநபர் கடன் திட்டத்தை அறிவித்து உள்ளது.;
சென்னை,
இந்துக்களுக்கு இல்லாத உரிமை சிறுபான்மை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு என்று குறிப்பிட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) தனிநபர் கடன் திட்ட அறிவிப்பு விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு விளக்கம் அளித்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
"தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ரூ.30 லட்சம் வரை தனிநபர் கடன் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதேபோன்று பிற்படுத்தப்பட்டோருக்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாகவும், ஆதிதிராவிடர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாகவும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதை மறைத்து சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கடன் வழங்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.