தூத்துக்குடியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.;
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக ரத்தக் கொடையாளர் தின விழா மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் இன்று நடைபெற்றது.
விழாவில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். விழாவில் பேசிய அமைச்சர், "எல்லா இளைஞர்களும், பெண்களும் ரத்ததானம் செய்து நோயாளிகளை காப்பாற்ற உதவ வேண்டும்" என்று தெரிவித்தார். முன்னதாக ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
விழாவில் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் கொடையாளர்கள் கொடுக்கும் ரத்தத்தைக் கொண்டு பல நோயாளிகள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பிற இடங்களில் பணி செய்பவர்கள் தொடர்ச்சியாக தங்கள் ரத்தத்தை தானம் செய்து வருகிறார்கள். ஒரு முறை ரத்தம் அளித்தால் 3 மாதங்கள் கழித்து மீண்டும் அளிக்க முடியும். 26 கொடையாளர்கள் கடந்த வருடத்தில் 4 முறை ரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலைவாணி மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சாந்தி மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.