சிறுவன் அடித்து கொலை.. தாயின் 2-வது கணவர் வெறிச்செயல்.. பிணத்துடன் 2 நாட்கள் இருந்த குழந்தை
5 வயது சிறுவனை, அவனது தாயின் 2-வது கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் செல்வமதன் (36), டிரைவர். இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். அதன்பின்பு செல்வமதன், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த செல்வி (31) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். செல்விக்கு ஏற்கனவே அபிநவ் (5) என்ற மகன் உண்டு. மேலும் செல்வமதனுக்கும், செல்விக்கும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உண்டு.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக செல்வமதனின் வீடு பூட்டி கிடந்தது. நேற்று காலையில் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் அருகே சென்று அழைத்து பார்த்தனர். ஆனால் வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதுபற்றி பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது போலீசார் கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ள ஒரு அறையில் சிறுவன் அபிநவ் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அவனது உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
பிணத்தின் அருகில் ஒன்றரை வயது குழந்தை சுயநினைவு இன்றி மயங்கி கிடந்தது. உடனே அந்த குழந்தையை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அபிநவ்வை அவனது வளர்ப்பு தந்தை செல்வமதன் அடித்துக்கொலை செய்து விட்டு தப்பி சென்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இதுகுறித்த வெளியான விவரங்கள்படி, “செல்வமதன் தனது 2-வது மனைவியான செல்வி, ஒன்றரை வயது மகன் மற்றும் செல்வியின் மகன் அபிநவ் ஆகியோருடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த மாதம் செல்வி தனது மகன்களை வீட்டில் தனியாக விட்டு விட்டு மாயமானார்.
அவர் எங்கே சென்றார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து செல்வமதன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாயமான செல்வியை தேடி வந்தனர். மேலும் வீட்டில் செல்வமதன், அபிநவ் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். மனைவி மாயமானதால் ஆத்திரத்தில் இருந்த செல்வமதன் கடந்த 31-ந் தேதி கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டார். அப்போது அவர் சிறுவன் அபிநவ்வை ஈவு இரக்கமின்றி கடுமையாக தாக்கி கொடூரமாக கொலை செய்தார். தொடர்ந்து ஒன்றரை வயது குழந்தையை வீட்டுக்குள் விட்டுவிட்டு கதவை பூட்டிகொண்டு தப்பி ஓடினார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு இந்த கொலை சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய செல்வமதனைபோலீசார் தேடி வருகிறார்கள்.
இதனிடையே சிறுவனை கொலை செய்துவிட்டு செல்வமதன் தப்பி சென்றநிலையில், வீட்டில் ஒன்றரை வயது குழந்தையும் இருந்தது. அந்த குழந்தை கடந்த 2 நாட்களாக சிறுவனின் பிணத்துடன் இருந்துள்ளது. மேலும் பசியால் அலறி துடித்துள்ளது. ஆனால், குழந்தையின் அழுகுரல் யாருடைய காதுக்கும் எட்டவில்லை. இதனால் பசியால் வாடிய அந்த குழந்தை இறுதியில் மயங்கி தெரிய வந்தது. தற்பொது அந்த குழந்தைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.