’கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி’ சி.பி.ஐ விசாரணை கேட்டு தவெக வழக்கு ; இன்று விசாரணை

கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என ஐகோர்ட்டு நீதிபதியிடம், தமிழக வெற்றிக்கழகத்தின் வக்கீல்கள் முறையிட்டனர்.;

Update:2025-09-29 07:10 IST

சென்னை,

கரூரில் நேற்று முன்தினம் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தமிழக வெற்றிக்கழகத்தினர் குற்றம்சாட்டிய நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த வக்கீல் அணியினர் மதுரை ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதி தண்டபாணியிடம் முறையிடுவதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று சென்றனர்.பின்னர் நீதிபதியை நேரில் சந்தித்த தமிழக வெற்றிக்கழக வக்கீல் அறிவழகன், ‘கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் விபத்து போல தெரியவில்லை. அது திட்டமிட்ட சதி போலவே தெரிகிறது.

பிரசாரத்தின்போது கற்கள் வீசப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். எனவே, இதுதொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.இதை கேட்ட நீதிபதி, ‘இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யுங்கள். வழக்கு நாளை (அதாவது இன்று) மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்' என்றார்.இதைத்தொடர்ந்து,

அங்கிருந்து வக்கீல்கள் புறப்பட்டு சென்றனர். நீதிபதியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை மனு தாக்கல் செய்யப்படுகிறது.மதுரை ஐகோர்ட்டுக்கு தற்போது தசரா விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மதியம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்