செங்கல்பட்டு: பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது பாய்ந்த மின்சாரம் - மருத்துவமனையில் அனுமதி
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் பூங்காவில், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது 2) என்ற சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக பூங்காவில் உள்ள மின்கம்பத்தில் சிறுமி கை வைத்தபோது சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பூங்காவின் மின் இணைப்பை துண்டித்து அங்குள்ள மின்கம்பங்களை ஆய்வு செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பூங்காவில் உள்ள மின்கம்பங்கள் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.