மழை-புயலால் விமானங்கள் ரத்து: இலங்கையில் 150 தமிழர்கள் தவிப்பு

புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 150 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.;

Update:2025-11-29 17:39 IST

 கொழும்பு :

இலங்கையில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த 3 நாட்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே துபாய், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு வரவிருந்த சுமார் 300 பேர் கடந்த 27-ந்தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒருநாள் முழுக்க அங்கு தவித்துள்ளனர்.

பின்னர் கொழும்பு விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். ஆனால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 150 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதியடிந்து வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கையில் தவித்து வரும் தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் பொதுத் துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக அமைச்சர் நாசர் கூறியதாவது:“இலங்கையில் கனமழை, வெள்ளம் காரணமாக விமானங்கள் இயக்கப்படாமல் கொழும்பு விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, விமான நிலையத்தில் இருக்கும் தமிழர்கள் உள்பட இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உடனடியாக உதவிகளை அளிக்கவும் இந்திய தூதர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியதால் இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்