எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை - ஜெயக்குமார்

குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.;

Update:2025-11-29 16:50 IST

கோப்புப்படம் 

அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தனக்கு அரசியல் வாழ்வளித்த ஜெயலலிதாவின் முதுகில் குத்திய எஸ்.ரகுபதி என்ற திமுக மந்திரி, முதுகில் குத்துவது பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். அரசியலின் ஏணிப் படிகளில், இந்த நாலாந்தரப் பேர்வழி ரகுபதி, ஏறுவதற்கு துணை நின்றவர்களை கடித்துக் குதறி அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அளித்த பேட்டியில், விளம்பரத்திற்காக கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை அமைத்து ஷூ காலுடன் நடந்த ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை பற்றி, அவருடைய விவசாயத் தொழிலைப் பற்றி கேலியும் கிண்டலுமாக பேசியதற்கு அவர் பதிலளித்தார்.

நெல்லின் ஈரப்பதத்தை 18 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்த அதிமேதாவி என்ன செய்தார் என்றும்; ஈரப்பதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்த காரணத்தை ஏன் வெளியிட திமுக அரசு தயங்குகிறது என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இதற்கு நேரடியாக பதில் சொல்ல வக்கற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளிடமாவது விளக்கிச் சொல்லத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். இதைப் பற்றி ரகுபதி தன்னுடைய சொந்த மாவட்டமான புதுக்கோட்டை விவசாயிகளிடம் நேரில் போய் சொல்லத் தயாரா?

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, தற்போது பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினார். ஏற்றிய ஏணியையே எட்டி உதைப்பதுபோல், வளர்த்த எஜமானரையே கடித்துத் குதறுவதுபோல் இந்த நபர் செயல்பட்டதை யாரும் மறக்கவில்லை.

பயிர்க் காப்பீடு செய்யாத இந்த அரசின் தவறை சுட்டிக்காட்டினார்; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை எடுத்து வைத்தார். கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே பல நாட்களாக குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை சுட்டிக் காட்டினார். டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலினின், விவசாயிகள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தினார்.

மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டார். இரண்டு முறை விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் பாதிக்கப்படும்போது வறட்சி நிவாரண நிதி, வெள்ள காலத்தில் நிவாரணம் உள்ளிட்ட சாதனைகளை விவரித்தார். ஆனால், ஸ்டாலினோ மழை வெள்ள நீரில் நனைந்து முளைவிட்ட நெல் கதிர்களை 'ட்ரே' வைத்து சென்னையில் பார்வையிட்டதை சுட்டிக் காட்டி, திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்புடன் இருப்பதைக் குறிப்பிட்டார்.

மொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கும் வகையில் கர்நாடக அரசு முயற்சிக்கும் மேகதாது அணை திட்டத்தை தன் சுயநலத்திற்காக, கண்டும், காணாமலும் இருக்கும் மு.க. ஸ்டாலினின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் முறையாக கடைமடை வரை செல்கிறதா என்பதைக்கூட பார்க்காமல், வெற்று விளம்பரத்திற்காக ஒருசில நடவடிக்கைகளை எடுக்கும் ஸ்டாலினின் விளம்பர மாடல் அரசை தோலுரித்துக் காட்டினார். முதல்-அமைச்சர் ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்னவென்றால், குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான். இவை எதற்கும் முறையாக பதில் சொல்ல வக்கில்லாமலும், வேளாண்துறைக்கென்று ஒரு மந்திரி, உணவு வழங்கல்துறைக்கென்று ஒரு மந்திரி என்று இருவர் இருக்கும்போது, முந்திரிக் கொட்டை போல தன் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் ரகுபதிக்கு என் வந்தது?

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டே பழக்கப்பட்ட திமுக கும்பலில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ, தான் படித்த படிப்பைக்கூட மறந்துவிட்டு உளறுவாயராக ரகுபதி இருப்பதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். அறிவாலயத்தின் வாசலில் நின்றுகொண்டு பதவிப் பிச்சை எடுக்கும் ரகுபதிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியோ, அதன் பொதுச் செயலாளரைப் பற்றியோ, அர்த்தம் இல்லாத வகையில் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் உங்கள் தலைவர் ஸ்டாலினையோ அவரது அருந்தவப் புதல்வர் உதயநிதியையோ பாராட்டி, நாமாவலி பாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்பதை எச்சரிக்கையோடு ரகுபதிக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்