நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான முழு நிதியை மானியமாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-11-29 15:57 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த, பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகம், பத்தாண்டுகளுக்கு முன்பு வரை உபரி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த பல்கலைக்கழகம் இன்று நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு 549 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 150 பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக முதுநிலைப் பட்டப்படிப்பில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதோடு கல்வியின் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகின்ற பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசால் அளிக்கப்படும் நிதி உதவி சம்பளம் அளிப்பதற்கே சரியாக இருக்கிறது என்றும், பல்கலைக்கழக மானியக் குழு நிதி உதவி அளிப்பதை நிறுத்திவிட்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக துணை வேந்தர் நியமிக்கப்படாததன் காரணமாக வருவாயை உயர்த்துவதற்கான புதிய முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்றும், கடந்த இருபது ஆண்டுகளாக கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 2025-2026ம் ஆண்டிற்கான 246 கோடி ரூபாய் திருத்திய நிதிநிலை அறிக்கையில், 149 கோடி ரூபாய் பற்றாக்குறை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது, 60 சதவீதம் பற்றாக்குறை.

இந்தச் சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 2015 முதல் 2025 வரை ஓய்வு பெற்ற 465 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்க 95 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், பல்கலைக்கழகத்தின் 1,450 ஓய்வூதியதாரர்களுக்காக வைக்கப்பட்டிருந்த 318 கோடி ரூபாய் நீண்டகால நிதியிலிருந்து 45 கோடி ரூபாயை எடுத்து ஓய்வு கால பலன்களை அளிக்க பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு செய்து இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதுபோன்றதொரு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகம் மிகப் பெரிய நிதிச் சிக்கலில் தற்போது தவிப்பதாகவும், இதிலிருந்து மீள ஒரே வழி பல்கலைக்கழகத்திற்குத் தேவையான நிதியை ஒருமுறை மானியமாக மாநில அரசு வழங்க வேண்டுமென்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் துணை வேந்தர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான முழு நிதியை மானியமாக வழங்கவும், பல்கலைக்கழகத்தின் வருவாயை அதிகரிக்கவும், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்