திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு

வேளாண் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.;

Update:2025-12-27 07:28 IST

திருவண்ணாமலை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு பயணமாக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் திருவண்ணாமலைக்கு வந்த அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேளாண் கண்காட்சியை இன்று காலை 10 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி அங்கு பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து லப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.2,095 கோடியே 7 லட்சம் மதிப்பிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, முடிவுற்ற 314 பணிகளை தொடங்கி வைத்தும் பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடியே 57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

பின்னர் அவர் அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கலசபாக்கம், வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலைகளை நேரில் சென்று திறந்து வைக்கிறார். அதன்பின் செய்யாறில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்.

முதல்- அமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். முதல்- அமைச்சரின் வருகையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்