கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டம்
கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.;
கோவை,
கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இங்கு விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், ஓடுபாதையை நீளப்படுத்தவும் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து விமான நிலைய விரிவாக்கத்துக்கான திட்டங்களை செயல்படுத்த விமான நிலைய ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் ரூ.29 கோடியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தற்காலிக மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் முதற்கட்டமாக 1½ ஆண்டுகளில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் முடிவடையும். பயணிகள் முனையம், சரக்கு முனையம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், தொழில்நுட்ப கட்டிடம் ஆகியவை 2 கட்டங்களாக நிர்மாணிக்கப்பட உள்ளது. ஓடுபாதையின் நீளம் 2,900 மீட்டரில் இருந்து 3,810 மீட்டராக (12,500 அடியாக) அதிகரிப்பது மட்டுமல்லாமல், அங்கிருந்து புறப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் உயர உள்ளது.
சிறப்பு பஸ் நிலையம், மல்டிலெவல் கார் பார்க்கிங், அணுகுசாலை, ஓட்டல்கள் போன்ற கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. பயணிகள் வருகை தற்போது ஆண்டுக்கு 3 லட்சத்து 63 ஆயிரமாக உள்ளது. விரிவாக்கத்துக்கு பிறகு ஆண்டுக்கு 15 லட்சம் வரை அதிகரிக்கும். தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் 33-ல் இருந்து 60 ஆக அதிகரிக்கும். அத்துடன் கோவையின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.