வீடு புகுந்து காதல் ஜோடி மீது தாக்குதல்: பெண்ணின் தாயார், 2 சகோதரர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஒரு ஜோடியின் காதலுக்கு, காதலி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.;
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள போலையார்புரம் கிழக்குத் தெருவை சேர்ந்த கனகராஜ் மகன் ராஜேஷ் (வயது 28). இவரும் உறவினரான சாந்தகுமார் மகள் ஜெபாஸ்லின் விஜியும் காதலி்த்து வருகின்றனர். இதற்கு காதலி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெபாஸ்லின், தன்னை சகோதரர் தாக்குவதாக கூறி ராஜேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து ஜெபாஸ்லின் தாயார் ஜெசிந்தா, சகோதரர்களான யாபேஸ், யானிஸ் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது ராஜேஷ் வீட்டிலிருந்த ஜெபாஸ்லின் விஜியை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அவர்களுடன் செல்ல ஜெபாஸ்லின் விஜி மறுத்ததால், ஆத்திரமடைந்த 3 பேரும் வீடுபுகுந்து அடித்து உதைத்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட ராஜேஷையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற ராஜேஷ் தந்தை கனகராஜையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வெளியேறி சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த ராஜேஷ், கனகராஜ், ஜெபாஸ்லின் விஜி ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து, காதலியின் தாய், 2 சகோதரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.