வங்கி மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி கைது
இந்த வழக்கு விசாரணைக்கு 2 பேரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.;
சென்னை,
சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் பாண்டியன் (வயது 62), இவரது மனைவி மேரி ஜாக்குலின் (59). இவர்கள் இருவரும் தனியாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்குவதாக கூறி 2 பிரபல வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் கடன் பெற்று மோசடி செய்துவிட்டனர் என்று வங்கி அதிகாரிகள் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கணவன்-மனைவி ஆகிய இருவர் மீதும் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு 2 பேரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தது.
இந்த நிலையில் 2 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த சுவாமிதாஸ் பாண்டின், மேரி ஜாக்குலின் ஆகிய 2 பேரை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.