கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வருகை
ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.;
கரூர்,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கடந்த 13-ந்தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கரூர் வந்துள்ளனர்.
சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. முகேஷ்குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கரூருக்கு வந்துள்ள நிலையில், அவர்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்கள் நேரில் சந்திக்க உள்ளனர் என்றும், இன்று அல்லது நாளை விசாரணையை அவர்கள் தொடங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.