கடலூர்: மழையால் சுவர் இடிந்து விழுந்து தாய்- மகள் உயிரிழப்பு: டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்
கடலூரில் மழையால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
கடலூர் மாவட்டத்தில் ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்து இருக்கிறார்.