“எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிரிகள் இருந்தார்கள்.. துரோகிகள் இல்லை.. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு..” - வளர்மதி
அம்மாவின் ஆன்மா இதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவத்திலே தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாக வளர்மதி தெரிவித்தார்.;
சென்னை,
சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக தற்காலிக அவைத்தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலாவதாக கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் உள்பட பலருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “காற்று கூட நுழையாமல் கழகத்தை காத்து நிற்கும் காவல் அரண். ஜெயலலிதாவுக்கு பின் புதையலாய் எழுந்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. இதே மேடையில் ஜெயலலிதா நடந்து வந்ததை எண்ணிப் பார்க்கிறேன். உலகிற்கு தான் ஜெயலலிதா மறைந்துவிட்டார்.
ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி உருவத்தில் நம்மை பார்த்து கொண்டிருக்கிறது. நம் அசைவை கவனித்து கொண்டிருக்கிறது.. அம்மா இல்லையென்றால் என்ன.. அண்ணன் இருக்கிறார் என்று தைரியமாக இருக்கிறோம். தஞ்சை பெரிய கோவில், தாஜ்மகாலின் உறுதி நம் கண்களுக்கு தெரியவில்லை. அதன் அஸ்திவாரத்தை போல் அதிமுகவின் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் அமர்வதற்கு தொண்டர்களே காரணம். அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை எந்த கொம்பனும் இந்த கட்சியை சாய்த்துவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாமல் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிரிகள் இருந்தார்கள்.. ஆனால் துரோகிகள் இல்லை.. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரிகளும், துரோகிகளும் இருக்கிறார்கள். இந்த துரோகிகள் சாக்ரடீஸுக்கே விஷம் கொடுத்தவர்கள்.
ஏசுவை சிலுவையில் அறைந்தவர்கள். கூர்வாளை ஏந்திவந்த ப்ரூட்டஸ்கள். அருவியில் குளித்தாலும் அழுக்குப் போகாத மனிதர்கள். வரலாற்றின் குப்பைத்தொட்டிகள்.. தராதரம் தெரியாதவர்கள்.. வரும் தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவது உறுதி. அதனை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக இப்போதும் போர்க்குணம் கொண்ட புலிதான். புலி இப்போதுதான் வேட்டைக்கு கிளம்பி இருக்கிறது. அது கோட்டைக்கு தான் செல்லும்.. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” என்று அவர் கூறினார்.