1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

குடியிருக்கின்ற இடம் பட்டாவுடன் வேண்டும் என்பது தான் இன்றைக்கு இருக்கும் மக்களுடைய மிகப்பெரிய பிரச்சனை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-13 15:34 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (13.10.2025) சென்னை காரம்பாக்கம் நவரத்தன்மல் ஜெயின் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:-

இன்றைக்கு இந்த மதுரவாயில் பகுதிக்கு வருகை தந்து 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகின்ற இந்த விழாவில் உங்களையெல்லாம் சந்தித்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இது மூன்றும் தான் ஒவ்வொரு மனிதனுக்கு அடிப்படை தேவைகள். இதில் உடை, உணவு பெரும்பாலும் எல்லோருக்கும் கிடைத்திருக்கும் என்றே சொல்லலாம். ஆனால், குடியிருக்கின்ற இடம் பட்டாவுடன் வேண்டும் என்பது தான் இன்றைக்கு இருக்கும் மக்களுடைய மிகப்பெரிய பிரச்சனை, மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக வீட்டுக்கு பட்டா இல்லை என்றால், அதனால் ஏற்படுகின்ற வேதனையை பட்டியலிட முடியாது. மின் இணைப்பு வாங்க முடியாது. தண்ணீர் இணைப்பு அவ்வளவு ஈசியாக கிடைத்து விடாது. வங்கி கடன் கிடைப்பது கஷ்டம். எப்போது யார் வந்து இடத்தை காலி செய்ய சொல்வார்கள் என்ற பதட்டம் கூடுதலாக இருக்கும். இன்றைக்கு உங்களுடைய கஷ்டங்களையெல்லாம், உங்களுடைய பதட்டங்களையெல்லாம் போக்கி பட்டா கொடுப்பதற்காக நாங்கள் அத்தனைபேரும் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கின்றோம்.

இன்றைக்கு பட்டா கிடைப்பதினால், இன்று இரவு உங்களுடைய வீடுகளில் நிம்மதியாக, உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு நீங்கள் தூங்கப் போகலாம், பட்டா என்பது உங்களுடைய நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல, அது உங்களுடைய உரிமை. இன்றைக்கு நம்முடைய முதல்-அமைச்சர், நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுடைய அந்த உரிமையை நிலைநாட்டி இருக்கின்றது.

இந்த மதுரவாயலைப் பொறுத்தவரை, இது மிக வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு பகுதி, இந்த பகுதி எந்த அளவிற்கு வளருகின்றதோ, அதற்கு இணையாக உங்களுடைய வாழ்கை தரமும் உயர வேண்டும் என்பது தான் நம்முடைய முதல்-அமைச்சருடைய ஒரே லட்சியம். மதுரவாயல் மட்டுமல்ல, சென்னை மற்றும் அதனைச் சுற்றி இருக்கக்கூடிய, அந்த பெல்ட் ஏரியாக்களில் குடியிருக்கக்கூடிய மக்களுக்கு உடனடியாக பட்டா கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள்.

சென்ற ஆண்டு நம்முடைய வருவாய்த்துறை அமைச்சருடைய தலைமையில் ஒரு குழு இதற்காக அமைக்கப்பட்டது. நம்முடைய முதல்-அமைச்சர் அந்த குழுவினருடன் பல முறை ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார்கள். அந்த குழுவினுடைய பரிந்துரையின்படி நம்முடைய முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கி இருக்கின்றோம் என்பதை இங்கே நான் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சென்னை மட்டுமல்ல, பிற மாவட்டங்களிலும் புறம்போக்கு நிலத்தில் வசிக்கின்ற மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என்று நம்முடைய முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். நம்முடைய முதல்-அமைச்சர் தலைமையிலான நம்முடைய அரசு அமைந்த நாள் முதல் இன்றுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 19 லட்சம் பட்டாக்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நான் இங்கே பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இதற்கு துணையாக, வழிகாட்டியாக நின்ற நம்முடைய முதல்-அமைச்சருக்கும், அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும், வாழ்த்துகளையும் பயனாளிகளின் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படி ஏழை, எளிய மக்களுடைய முன்னேற்றத்திற்காக கலைஞர் வழியில் நம்முடைய முதல்-அமைச்சர் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். கழக அரசைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு நாளும் கழக அரசிற்கு மக்களுடைய அன்பும், ஆதரவும் பெருகிக்கொண்டிருக்கிறது. அரசைத்தேடி மக்கள் வரவேண்டும் என்ற அந்த நிலைமையை மாற்றி, இன்றைக்கு மக்களைத்தேடி நம்முடைய அரசு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அந்த நிலைமையை முதல்-அமைச்சர் உருவாக்கி இருக்கின்றார்.

குறிப்பாக, கடந்த இரண்டுமாத காலமாக, உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் மக்கள் குறைதீர்ப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம் என்பது உங்களுக்கு தெரியும். அந்த முகாம்களில் வருகின்ற மனுக்கள் அத்தனையும், உடனடியாக, முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் முடியமோ, அதை பரிசீலித்து அதையெல்லாம் முதல்-அமைச்சரின் தனிப்பட்ட மேற்பார்வையில் அனைத்து அரசு அதிகாரிகளுடனும் ஆய்வுக்கூட்டம் நடத்தி, முதல்-அமைச்சருடைய தனி கவனத்தோடு அந்த முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, பல்வேறு திட்டங்கள் குறிப்பாக சமீபத்தில் தொடங்கப்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று, ரேசன் பொருட்களைக் கொடுக்கின்ற முதல்-அமைச்சருடைய தாயுமானவர் திட்டத்தை நம்முடைய முதல்-அமைச்சர் செயல்படுத்தியிருக்கின்றார்.

அதேமாதிரி, மகளிர் வளர்ச்சிக்காக மகளிர் விடியல் பயணத்திட்டம், மகளிருடைய கல்வி உயர்வுக்காக புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுடைய கல்விக்காக தமிழ்ப்புதல்வன் திட்டம், குழந்தைகளுடைய கல்விக்காக முதல்-அமைச்சருடைய காலை உணவுத் திட்டம், மகளிருடைய பொருளாதார உரிமைக்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை நம்முடைய முதல்-அமைச்சர் செயல்படுத்தி காட்டியிருக்கின்றார்.

இன்றைக்கு பல முற்போக்கான திட்டங்களின் காரணமாக, இந்தியாவிலேயே நம்முடைய மாநிலம் 11.19 சதவீதம் வளர்ச்சியோடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் நம்முடைய தமிழ்நாடு சிறப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, உங்களுக்கு இன்னும் அதிகமாக உழைக்க நம்முடைய முதல்-அமைச்சரும், நாங்களும் காத்திருக்கின்றோம். இந்த அரசு என்றைக்கும் மக்களோடு, உங்களோடு பக்கபலமாக உங்களுக்கு துணையாக இருக்கும். எனவே இந்த அரசுக்கு துணையாக நீங்கள் என்றைக்கும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, பட்டாக்களை பெற வந்துள்ள உங்கள் அத்தனைபேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து,

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்தையும் தெரிவித்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் க. கணபதி, ஜோசப் சாமுவேல், மருத்துவர் நா.எழிலன், ரா.மூர்த்தி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பெ.அமுதா. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன்,

துணை மேயர் மு.மகேஷ்குமார், நிலநிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே. நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தீபக் ஜேகப். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் கணேசன். மண்டலக்குழுத் தலைவர் வே.ராஜன், வட்டார துணை ஆணையாளர் (தெற்கு) அதாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்