ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.;

Update:2025-08-22 22:10 IST

கோப்புப்படம் 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி இன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

முன்னதாக அவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.

பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி, அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல தேவிபட்டினம் நவபாசான நவகிரக கடல், திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலிலும் ஆவணி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்