வெவ்வேறு சமூகம்: காதலுக்கு எதிர்ப்பு.. 16 வயது சிறுமியுடன் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.;
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரிசிவா (வயது 20). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு பணகுடியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமிக்கும், மாரி சிவாவுக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார். இதற்கிடையே அன்றைய தினம் மாரிசிவாவும் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், 2 பேரும் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்கள்.
இந்த நிலையில் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது, 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நேற்று காலையில் பணகுடி தெற்கு ரதவீதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் மாணவியும், மரியசிவாவும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு பிணங்களாக தொங்கினர். இதை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.