காதலித்த சிறுமியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

காதலர்கள் இருவரும் சந்தித்துப் பேசுவதை நிறுத்துமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.;

Update:2025-09-12 20:00 IST

கோப்புப்படம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சி தடிராமன் வட்டத்தைச் சேர்ந்தவர் சேட்டுவின் மகன் சிவநந்தன் (19 வயது). இவர், ஊட்டியில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர், உள்ளூரிலேயே வேலை பார்த்து வந்தார்.

ஜோலார்பேட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சிவநந்தன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஜோலார்பேட்டை அருகே சிறுமியின் சகோதரிக்கு சொந்தமான ஸ்வீட் கடையில் காதலர்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதைக் கண்காணித்த குடும்பத்தினர், சிவநந்தனிடம் இருவருக்கும் சிறிய வயது, 4 ஆண்டு கால படிப்பை சிறுமி முடிக்கட்டும், நீயும் வேலையில் சேர்ந்து நல்ல நிலைக்கு வந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கிடையே, இருவரும் சந்தித்துப் பேசுவதை நிறுத்துங்கள், என்று அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

நேற்று முன்தினம் மீண்டும் காதலர்கள் சந்தித்துப் பேசிய நிலையில், இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் சிவநந்தனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சிவநந்தன் தனது செல்போனில் தாயாரின் புகைப்படத்தை வைத்து ‘அம்மா என்னை மன்னித்து விடு’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரது குடும்பத்தினர் இரவு தூங்கிய நிலையில், அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் அருகே ஒரு மரத்தில் சேலையால் சிவநந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிவநந்தனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்