முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட கலெக்டர்கள்
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களான ஆர்.சதீஷ் (தருமபுரி), எஸ்.சரவணன் (திண்டுக்கல்), எம்.பிரதாப் (திருவள்ளூர்), சி.தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), எஸ்.சேக் அப்துல் ரகுமான் (விழுப்புரம்), கே.தர்பகராஜ் (திருவண்ணாமலை), வி.மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர்.சுகுமார் (திருநெல்வேலி), கே.சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது புதிய கலெக்டர்களிடம் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் களத்தில் இருக்கப் போகும் நீங்கள், அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
மேலும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.