தீபாவளி பண்டிகை: ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 320 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஈரோட்டில் இருந்து சென்னைக்கு 15 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.;

Update:2025-10-14 04:35 IST

ஈரோடு,

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 18-ந் தேதியில் இருந்து வார இறுதி நாட்கள் தொடங்குவதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதனால் நாளை மறுநாளில் (வியாழக்கிழமை) இருந்து ஊர்களுக்கு செல்வதற்காக பலரும் ரெயிலில் முன்பதிவு செய்து உள்ளனர். ரெயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள், பஸ்களை எதிர்நோக்கி காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டலம் சார்பில் நாளை மறுநாளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஈரோட்டில் இருந்து மதுரை, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோட்டில் இருந்து மதுரைக்கு நாளை மறுநாள் 24 பஸ்களும், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு தலா 10 பஸ்களும், திருச்சிக்கு 13 பஸ்களும் கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 17-ந் தேதி முதல் 20-ந் தேதி அதிகாலை வரை மதுரைக்கு 35 பஸ்களும், சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு தலா 15 பஸ்களும், திருச்சிக்கு 22 பஸ்களும் இயக்கப்படும். மேலும், மதுரையை கடந்து செல்லும் ஊர்களான திருச்செந்தூர், நாகர்கோவில், நெல்லை, ராமேசுவரம் போன்ற ஊர்களுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து தினமும் 10 பஸ்களை கூடுதலாக இயக்க திட்டமிட்டு உள்ளோம். எனவே மொத்தம் 320 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தனியார் பஸ்கள்

சென்னைக்கு கடந்த ஆண்டு 10 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு 15 தனியார் பஸ்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவை அரசு போக்குவரத்துக்கழக இணையதளத்தில் பயணிகள் செய்யலாம். இது அரசு சார்பில் கட்டணத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் பயணிகள் சென்னைக்கு திரும்பி செல்வதற்கு வசதியாக தினமும் 15 தனியார் பஸ்கள் மற்றும் 10 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கோவைக்கு கூடுதலாக 50 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் சென்று வர கூடுதலாக டவுன் பஸ்கள் விடப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்