தீபாவளி பண்டிகை கூட்டம் அதிகரிப்பு: மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மாசி வீதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர்.;

Update:2025-10-15 08:12 IST

கோப்புப்படம்


தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக, அக்கம் பக்கத்து மாவட்ட மக்கள் மதுரைக்கு வந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதன் காரணமாக, நேதாஜி ரோடு, மேலமாசிவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், நாள்தோறும் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது.

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக இன்று (புதன்கிழமை) முதல் மாசி வீதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கே.பி.எஸ். சந்திப்பில் இருந்து நேதாஜி ரோடு மற்றும் ஜம்ஜம் சந்திப்பில் இருந்து மேலவடம்போக்கி தெரு முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

இதுபோல, டி.எம். கோர்ட் சந்திப்பில் இருந்தும் கூடலழகர் பெருமாள் கோவில் சந்திப்பிலிருந்தும் எந்த ஒரு வாகனமும் மேலவடம்போக்கி தெரு வழியாக டி.பி.கே.ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.

ஜான்சி ராணி பூங்கா முதல் முருகன் கோவில் வரை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலக்கோபுரத்தெரு, மேலஆவணிமூல வீதியிலிருந்து வரும் வாகனங்கள் நேராக நேதாஜி ரோடு முருகன் கோவில் செல்லாமல் மீனாட்சி பஸ் நிலையம், கான்சாமேட்டுத்தெரு, டி.எம்.கோர்ட், மேலமாசி வீதி வழியாக முருகன் கோவில் சந்திப்பு செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

பெருமாள் தெப்பம் சந்திப்பில் இருந்து எந்த ஒரு வாகனங்களும் நேதாஜி ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் அனைத்தும் டவுன்ஹால் ரோடு வழியாக செல்ல வேண்டும். நேதாஜி ரோட்டில் இருந்து பச்சை நாச்சியம்மன் கோவில் தெரு வழியாக பெருமாள் தெப்பத்திற்கு வாகனங்கள் செல்லலாம். எனவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்