இன்று தே.மு.தி.க. மாநாடு: யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கிறார் பிரேமலதா
கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு இன்று நடைபெற உள்ளது.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடக்கிறது. இதற்காக 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் கட்சி தோரணங்கள், பதாகைகள் வைக்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன் போன்ற வாகனங்களை நிறுத்த தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பிய திசையெங்கும் தே.மு.தி.க. கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பாசார் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மாநாட்டு திடலுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர், கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், விஜயகாந்த் பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரதநாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி நடக்கிறது.இதையடுத்து மாலை 6 மணி அளவில் மாநாடு தொடங்கி நடக்கிறது. இதற்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அப்போது அவர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் சட்டசபை தேர்தலில் யாருடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்பதை மாநாட்டில் தெரிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று நடைபெறும் மாநாட்டில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை அவர் அறிவிக்க இருக்கிறார். இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.