தொடர்மழை எதிரொலி.. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல், கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து சென்று மழையை கொடுத்து இருக்கிறது. இந்த புயல் உருவாவதற்கு முன்னதாகவே இது காற்று பாதிப்பை ஏற்படுத்தாமல், பரவலாக நல்ல மழையை கொடுக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் வலுவிழந்து சென்னை கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தஞ்சம் அடைந்திருந்த டிட்வா புயல், மேற்கத்திய தாழ்வுநிலையில் இருந்து அதாவது, இமயமலையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றை ஈர்த்து வலுவான மேகக்கூட்டங்களை உருவாக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் இருந்து தன்னுடைய மழை ஆட்டத்தை மீண்டும் தொடங்கியது. இதனால் சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்திலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இப்படியாக வட மாவட்டங்களிலும் டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18 மணி நேரத்துக்கும் மேலாக நிலைகொண்டு, மழையை கொட்டியது. இதனால் சென்னையிலும், புறநகர் பகுதிகளில் சில இடங்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றன.
நேற்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழையை கொடுத்தபடியே இருந்தது. பின்னர், சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வுப் பகுதியாகவும் வலுகுறைந்து போனது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து 1,380 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 3110 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 500 கன அடியாகவும், பூண்டி ஏரியில் உபரி நீர் 200 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும்நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.