100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலா - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
550 ஆசிரியர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.;
10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச் சுற்றுலாவினை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மேயரின் 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீத சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 2023-24ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த 408 ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம் கொடைக்கானல் (International School), ஏற்காடு, ஒகனேக்கல் ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, 2024-25-ம் கல்வியாண்டில் சென்னை பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த 550 ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக, திருச்சி IIM, NIIT மற்றும் கொடைக்கானல் International School போன்ற கல்வி நிறுவனங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். அதன் ஒருபகுதியாக, முதற்கட்டமாக 184 ஆசிரியர்களின் கல்விச் சுற்றுலாவினை மேயர் பிரியா இன்று (05.10.2025) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும், 08-10-2025 அன்று 91 ஆசிரியர்களும், 12-10-2025 அன்று 184 ஆசிரியர்களும், 15-10-2025 அன்று 91 ஆசிரியர்களும் என மொத்தம் 550 ஆசிரியர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக 4 வாரங்களில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.