டெல்லியில் போலீஸ் வேன் மோதி முதியவர் உயிரிழப்பு - 2 காவலர்கள் சஸ்பெண்ட்
விபத்து நடந்தபோது 2 காவலர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள ராமகிருஷ்ணா ஆஷ்ரம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று காலை 5 மணியளவில் போலீஸ் வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கங்காராம் திவாரி என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கங்காராம் திவாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கங்காராம் திவாரி கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் தனது கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய போலீஸ் வாகனத்தில் 2 காவலர்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது இருவரும் மது போதையில் இருந்தார்களா? என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அரியானா மாநிலத்தில் இதே போல் காவல்துறை வாகனம் மோதி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.