கேரளாவில் பரவும் மூளை காய்ச்சல் - சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடு

சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-16 14:26 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் சமீப காலமாக அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பால் அங்கு இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநில சுகாதாரத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நடக்கிறது. முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், அய்யப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என்றும், குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை இருப்பதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், பக்தர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவசர மருத்துவ உதவி எண்ணிற்கு(04735-203232) தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்