கே.என்.நேருவின் சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்
கே.என்நேருவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.;
சென்னை,
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள டி.வி.எச்., குழுமம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக நேருவின் மகன் அருண், சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்றுள்ளனர். தங்களிடம் உள்ள ஆவணங்கள், விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.