ஈரோடு: ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு
நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஈரோடு,
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி துளசிமணி. இவர்கள் தங்களது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து திருப்பதிக்கு ரெயிலில் சென்றனர். பின்னர் அவர்கள் சம்பவத்தன்று சொந்த ஊருக்கு திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பினர். அந்த ரெயில் சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது துளசிமணி ஜன்னல் ஓரமாக தூங்கி கொண்டு இருந்தார்.
காவிரி ஆற்றுப்பாலத்தை கடந்து ரெயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துளசிமணி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் நகையை மர்மநபர் பறித்துவிட்டு தப்பிச்சென்றார்.
திடுக்கிட்டு எழுந்த துளசிமணி "திருடன்... திருடன்..." என்று கூச்சலிட்டார். இதனால் சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரெயில் ஈரோட்டை சென்றடைந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசில் துளசிமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 4½ பவுன் நகையை மர்மநபர் பறித்துவிட்டு தப்பிய துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.