பரபரக்கும் அரசியல் களம்: தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ந் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!

அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15-ந் தேதி வரை கெடு விதித்துள்ளார்.;

Update:2025-11-25 12:43 IST

சென்னை,

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே அக்கட்சியில் உள்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அப்போது ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் பிரச்சினை வெளியே தெரியவில்லை.

முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்த பிறகு, உள்கட்சி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது.

Advertising
Advertising

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். ஆட்சியில் இருக்கும்போதே சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனும் அதிருப்தியில் இருந்து வந்தார். அவரது சொந்த மாவட்டமான ஈரோட்டில் கட்சிப் பதவியில் இருந்த கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை நியமித்தார்.

இதனால், கடும் அதிருப்திக்கு உள்ளான கே.ஏ.செங்கோட்டையன், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். இதனால், கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் விதித்ததால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில்தான், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றிணைந்து, அங்கு வந்த டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.

அவர்கள் அனைவரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு செவிமடுக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் இதே கருத்தை வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

இந்த நிலையில், தொடர்ந்து மவுனம் காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, வரும் 27-ந் தேதி தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார். அதற்கு முன்னதாக தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்ய இருக்கிறார். இந்த தகவலை அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். 

அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15-ந் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார். அதன்பிறகு, அவர் புதிய கட்சி தொடங்குவாரா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா? என்பது தெரியவரும்.

கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய நிலைப்பாடு தமிழக அரசியலை அதிரச் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்