கொட்டித்தீர்த்த கனமழை: திருவாரூரில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம்

மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;

Update:2025-11-25 12:55 IST

திருவாரூர்,

இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

இந்த நிலையில், தொடர் மழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 20,000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைதுள்ளன. முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு தாலுகாக்களில் 20,000 ஏக்கர் பயிர்கள் மழையால் சேதம் அடைந்துள்ளன.கனமழையால் வயல்களில் தேங்கிய நீரில் பயிர்கள் அழுகி விட்டால் என்ன செய்வது என புரியாது பரிதவிக்கும் விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 942 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. மேலும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 795 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்