சென்னையில் வளர்ப்பு நாய்களை சாலையில் விட்டுசென்றால் அபராதம் - மேயர் பிரியா எச்சரிக்கை
தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு 'சிப்' பொருத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று, ஜூலை மாதத்திற்கான மாதாந்திர மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, நேரமில்லா நேரத்தின்போது பேசிய 139-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி(ம.தி.மு.க.), "சென்னையில் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் ஆரம்பத்தில் அதை நன்றாக பராமரிக்கிறார்கள். சிறிது நாட்கள் கழித்து பராமரிக்க முடியாமல் சாலையில் விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை அவசியம்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, "சென்னையில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு 'சிப்' பொருத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் வளர்ப்பு நாய்கள் அதற்கான பிரத்யேக செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது. உரிமையாளர்கள் தன்னுடைய நாயை சாலையில் விட்டு செல்வது கண்டறியப்படும்போது அவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மண்டலம் வாரியாக கால்நடை சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.