சென்னை ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி

ஜே.இ.இ. நுழைவு தேர்வில் ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.;

Update:2025-06-05 15:34 IST

சென்னை,

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி அருகே கருமந்துறையை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லரான இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் ஆண்டி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆண்டியின் மகன் ஸ்ரீகணேஷ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தந்தையின் தொழிலான டெய்லர் வேலையை செய்து வருகிறார். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்கிரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதியின் 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களும் எடுத்தார். தொடர்ந்து பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பிய ராஜேஸ்வரி, பெருந்துறையில் உள்ள அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து ஜே.இ.இ. நுழைவு தேர்வை எழுதினார்.

இதில் ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து ராஜேஸ்வரிக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் சேர இடம் கிடைத்தது. இதன் மூலம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்மக்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்