வெள்ள பாதிப்பு: வடமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க ராகுல்காந்தி வலியுறுத்தல்
மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;-
பஞ்சாபில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான காலங்களில் பிரதமரின் கவனமும், மத்திய அரசின் உதவியும் மிகவும் அவசியம். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.
மக்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே இந்த மாநிலங்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக உடனடியாக நிவாரண உதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.