தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை'கிடுகிடு' உயர்வு
பிச்சி, முல்லை பூக்களின் விலை இரு மடங்கு அதிகரித்தது.;
குமாரி,
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மேலும் நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போக்கள் மூலம் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. பூக்களின் விலை ஏறி இறங்கும் தன்மை கொண்டது. அதாவது பண்டிகை மற்றும் பூக்கள் வரத்து குறைவு காலங்களில் விலை உயர்ந்தும், வரத்து அதிகரிப்பு, சாதாரண நாட்களில் விலை குறைந்தும் காணப்படும்.
அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் நேற்று தோவாளை மார்க்கெட்டில் பிச்சிப்பூ விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.600 உயர்ந்து ரூ.1,200-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.550-ல் இருந்து ரூ.550 உயர்ந்து ரூ.1100-க்கும் விற்பனையானது.