திருச்செந்தூர் கடற்கரையில் அதிகளவில் கரை ஒதுங்கிய கடல் பாசிகள் - அகற்றும் பணி தீவிரம்
கோவில் நிர்வாகம் சார்பில் கடல் பாசிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் கடந்த ஓரிரு தினங்களாக அதிக அளவிலான கடல் பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனையடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், கோவில் நிர்வாகம் சார்பில் கடல் பாசிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடல் பாசிகள் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.