போக்குவரத்து ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனசை அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு நடப்பாண்டிலாவது தீபாவளி திருநாள் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தீபாவளி திருநாள் வரும் 20-ஆம் நாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு வசதியாக போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கத்தினரின் நலனின் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு இதுபோன்று தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
2025-ஆம் ஆண்டுக்கான தீபாவளி திருநாள் அக்டோபர் 20-ஆம் நாள் கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளையொட்டி அடித்தட்டு மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுவது வழக்கம்.
இதற்கு வசதியாக அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு முன்பணமும், போக்குவரத்துக் கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு முன்பணத்துடன், மிகை ஊதியமும் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. தீபாவளி திருநாளுக்கு குறைந்தது 20 நாள்களுக்கு முன்பாவது இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு ஆடைகளை வாங்கி தீபாவளிக்கு தயாராக முடியும்.
வழக்கமாக தீபாவளி திருநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுகள் நடத்தப்படும். அப்போது தான் மிகை ஊதியத்தின் அளவை கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்மானித்து, குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாவது தொழிலாளர்களுக்கு வழங்க இயலும். ஆனால், அக்டோபர் 20-ஆம் நாள் கொண்டாடப்படும் தீபாவளிக்கு இன்னும் 17 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில்,
இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை; அறிவிப்பும் வரவில்லை. அதனால், பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசு, மிகை ஊதியம் வழங்குவதிலும் துரோகத்தைத் தொடருமோ? என்று பொதுத்துறை பணியாளர்கள் சந்தேகப்படுகின்றனர். தொழிலாளர்களின் சந்தேகம் சரியானது தான்.
தீபாவளி மிகை ஊதியம் வழங்கப்படுவது கட்டாயம் எனும் நிலையில், அதை முன்கூட்டியே அறிவித்து வழங்குவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என்பது தான் தெரியவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கான மிகை ஊதியத்தை அறிவிப்பதில் திமுக அரசு தாமதம் செய்தது. பா.ம.க. சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும் என்று அக்டோபர் 10-ஆம் நாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால், தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 29-ஆம் நாள் தான் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான பொதுத்துறை ஊழியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப் பட்டது. அதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட முடியாமல் அவதிப்பட்டனர். இந்த ஆண்டும் அதேபோன்ற மோசமான சூழலை தமிழக அரசு உருவாக்கிவிடக் கூடாது.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20 சதவீதம் மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கான மிகை ஊதியம் என்பது அவர்களின் மொத்த ஊதியத்தை கணக்கிட்டு வழங்கப்படுவதில்லை.
மாறாக மிகை ஊதியக் கணக்கீட்டுக்கான ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதன் ஆண்டு சராசரியிலிருந்து தான் 20 சதவீதம் மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மிகை ஊதியத்தின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாலும் அதை அரசு ஏற்கவில்லை.
பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு நடப்பாண்டிலாவது தீபாவளி திருநாள் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும்; அது அடுத்த இரு நாள்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.