சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பியுள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
‘சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை கவர்னர் மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளார்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.;
சென்னை,
நெல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்து, சட்ட முன்வடிவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அந்த மசோதா நான்கு, ஐந்து முறை சில திருத்தங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி, கவர்னர் மீண்டும் 4 திருத்தங்களுடன் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். அந்த கடிதம், தற்போது சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் திருத்தங்கள் சரிசெய்யப்பட்டு, எப்போது சட்டமன்றம் கூடினாலும் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் 2,240 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால், இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடியதன் விளைவாக, கடந்த வாரம் அந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். அதன் பிறகு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு முதல்-அமைச்சரால் பணி ஆணைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.