‘அரசு ஊழியர்கள் தி.மு.க.வின் சூழ்ச்சிக்கு இரையாகி விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்’ - சசிகலா
தி.மு.க. அரசின் பித்தலாட்டத்தை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சசிகலா கூறியுள்ளார்.;
சென்னை,
அரசு ஊழியர்கள் தி.மு.க.வின் சூழ்ச்சிக்கு இரையாகி விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க. தலைமையிலான அரசு தற்போது புதிதாக ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருப்பது தமிழக மக்களை வழக்கமாக ஏமாற்றுகின்ற மற்றொரு நாடகமாகத்தான் பார்க்க முடிகிறது.
தி.மு.க. தலைமையிலான அரசின் பித்தலாட்டத்தை அரசு ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். எனவே, தி.மு.க.வினர், அரசு ஊழியர்களை ஏமாற்றுவதை விட்டு விட்டு அவர்களுக்கு உண்மையாக இருங்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய திட்டங்களை கொண்டு வாருங்கள்.
அரசு ஊழியர்களுக்கு நலன் பயக்கக்கூடிய ஆட்சி என்றால் ஜெயலலிதா ஆட்சியாகத்தான் இருக்கமுடியும். அரசு ஊழியர்கள் தி.மு.க.வினரின் சூழ்ச்சிக்கு இரையாகி விடாமல் விழிப்புடன் இருந்து, வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.