திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் விவகாரம்: தமிழக அரசு விளக்கம்

திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;

Update:2026-01-05 23:31 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவொற்றியூர் குப்பம் சூரை மீன்பிடி துறைமுகம் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளதாக 05.01.2026 அன்று நாளிதழில் வெளியான செய்தி தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது ஆகும்.

சென்னை மாவட்டம், திருவொற்றியூர் குப்பம் சூரை மீன்பிடி துறைமுகம் ரூ.272.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, 28.05.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு மீனவ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. Tamilnadu Marine Fishing Regulation Act & Rules அடிப்படையில் துறைமுக மேலாண்மை சங்கம் 13.06.2025 அன்று பதிவு செய்யப்பட்டு, மீன்பிடித்துறைமுகத்தினை பராமரித்திட ஏதுவாக சென்னை மாவட்டஆட்சியர் அவர்களை தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழுவும், சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் தலைமையில் மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் மீனவர்களுக்கான தங்குமிடம், படகு தங்குதளம், படகு பழுதுபார்ப்பு வசதி உள்ளிட்ட சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. அருகாமையில் உள்ள ஐந்து கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகுகள் தடையின்றி தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. வலை பின்னும் கூடம் 3874 சதுர அடி பரப்பளவில் கான்கிரீட் அமைப்பாக கட்டப்பட்டு முழு பயன்பாட்டில் உள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அனுமதியுடன், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மூலம் டீசல் பங்க் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குளிர்சாதன சேமிப்பு (100 டன்) கிடங்கு மற்றும் பனிக்கட்டி நிலையம் (50 டன்) ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சூரை மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ மகளிரின் திறன் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மீன் மற்றும் இறால் பொருட்களுக்கு மதிப்பூட்டும் பயிற்சி, மீன் பொருட்களை பாதுகாப்பான முறையில் தயாரித்து விற்பனை செய்யும் பயிற்சி, கடலோர பாதுகாப்புப் படை / காவல் படை ஒருங்கிணைப்பு கூட்டங்கள், கடல் ஆமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பெண்கள் மேம்பாடு தொடர்பான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அழிவுப் பாதிப்பில் உள்ள கடல் உயிரினங்கள் பாதுகாப்பிற்காக வனத்துறை மூலம் Marine Elite Force 3 ரோந்து படகுகளை இத்துறைமுகத்திலிருந்து இயக்கி தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணமாக வார இறுதிகளில் பொதுமக்கள் நுழைவு கட்டுப்படுத்தப்பட்டு, மீன்பிடி தொடர்புடைய செயல்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. எனவே, துறைமுகம் செயல்பட்டு வருவதுடன், மூடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்