முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திண்டுக்கல் செல்கிறார்

திண்டுக்கல் மாவட்டத்துக்கு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவிக்க இருக்கிறார்.;

Update:2026-01-06 02:53 IST

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

அதோடு ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார். மேலும் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இதில் ரூ.75 கோடியில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு கலைக்கல்லூரி, ரூ.15 கோடியில் கட்டப்பட்ட அரசு கலைக்கல்லூரி, குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை இடம்பெறுகின்றன. இதுதவிர மாவட்டத்துக்கு புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் அறிவிக்க இருக்கிறார்.

இந்த விழாவுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. அரசு விழாவில் பங்கேற்பதற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மதுரையில் இருந்து கார் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகிறார். இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. சார்பில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி திண்டுக்கல்-மதுரை சாலையில் பாண்டியராஜபுரம், கொடைரோடு சுங்கச்சாவடி, பெருமாள்கோவில்பட்டி, சின்னாளப்பட்டி, தோமையார்புரம், கலெக்டர் அலுவலகம் அருகில் அஞ்சலி ரவுண்டானா ஆகிய 6 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அப்போது முதல்-அமைச்சர் தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்று கொள்ள இருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்