‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்; மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது’ - நிர்மலா சீதாராமன்

முன்பு 4 வகைகளாக இருந்த ஜி.எஸ்.டி. வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-14 12:22 IST

சென்னை,

இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மக்கள் மீதான வரிச்சுமையை குறைந்துள்ளது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“முன்பு 4 வகைகளாக இருந்த ஜி.எஸ்.டி. வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இந்தியாவின் 140 கோடி மக்கள் மீதும் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு 12 சதவிதமாகவும், 18 சதவீதமாகவும் இருந்த பொருட்களின் வரி, தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பொருட்களின் வரி பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முற்றிலுமாக வரி நீக்கப்பட்டுள்ளது.

இந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் தீபாவளிக்கு முன்பாக அமல்படுத்தப்படும் என்று செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தெரிவித்தார். தென்மாநிலங்களில் நாம் தீபாவளிக்கு முன்பாக புதிய துணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவோம். ஆனால் வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையை முன்னிட்டு வீட்டிற்கு நிறைய பொருட்கள் வாங்குவார்கள்.

எனவே, அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருக்கக் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் பண்டிகைகளையும் மனதில் வைத்துக் கொண்டு முன்கூட்டியே ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்தை அறிவித்துவிட்டோம். இது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்