உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்;
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பென்ஷன் திட்டத்தின் பெரும்பகுதி அம்சங்களை நிறைவேற்றும் வகையில், “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
நவீன தாராளமய சூழலில், சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட்டத்திற்கு மக்களின் சேமிப்புகள் காவு கொடுக்கப்படும் வேளையில், தொடர்ந்த போராட்டங்களின் வாயிலாக இம்முன்னேற்றம் ஈட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும்.
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஒன்றாக, ஓய்வூதியம் சமூக, பொருளாதார கடப்பாடு என்கிற கோட்பாட்டின் மீதே பெரும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, பழைய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு, புதிய பென்ஷன் திட்டம், பிறகு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டன. அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் பெருத்த எதிர்ப்பை உருவாக்கிய ‘புதிய’ பென்ஷன் திட்டம், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான், கண்டனத்துக்குரிய விதத்தில் 9 மாதங்கள் முன் தேதியிட்டு அமலுக்கு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சி, அரசு ஊழியர் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாதது மட்டுமல்ல, போராடிய ஊழியர்கள் மீது மிகவும் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு உரிய நிதிப்பங்கீட்டை வழங்காமல் வஞ்சித்து வருகின்ற போதிலும், அரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ள நிலையிலும் பயன் வரையறுக்கப்பட்ட, பணிக்கொடை, அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட "உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை" தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதானது 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை உடனே அமலாக்கக் கூடிய விதத்தில் அரசாணையை வெளியிட வேண்டுமெனவும், சாலை பணியாளர் பணி வரன்முறை, சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் போன்ற அடித்தட்டு மக்களின் காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு கோரிக்கைகள், ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் உள்ளிட்ட பகுதியினரின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட அரசு ஊழியர் - ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்றிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. என தெரிவித்துள்ளார்.