சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு?- வெளியான புதிய கருத்து கணிப்பு முடிவு
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது.;
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது. அதன் முடிவுகளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் சார்பில் 61-வது கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கள ஆய்வில் வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல்-அமைச்சராக வரும் வாய்ப்பு யாருக்கு அதிகம் இருக்கிறது என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளனர். இதில் 2-வது இடத்தை விஜய்யும், 3-வது இடத்தை எடப்பாடி பழனிசாமியும் பெறுகின்றனர்.
2021 சட்டசபை தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு 25 சதவீதம் பேர் ஆம் என்றும், ஓரளவு என்று 17 சதவீதம் பேரும், இல்லை என்று 47 சதவீத பேரும் கூறியிருக்கின்றனர். 4¾ ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கேட்டதற்கு 37 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாகவும், 54 சதவீதம் பேர் சரியில்லை என்றும், கருத்து சொல்லவிருப்பம் இல்லை என்று 39 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
நடிகர் விஜய் அரசியல் வருகையால் திமுகவுக்கே அதிகம் பாதிப்பு என்றும், அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்ற நிலையில், கட்சி வளர்ச்சி அடையவில்லை என்று 60 சதவீதம் பேர் கூறியுள்ளது. விஜய்யின் அரசியல் நிலைப்பாடு சரியில்லை என்று 53 சதவீதம் பேரும், நன்றாக இருப்பதாக 22 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இளம் வாக்காளர்களை கவருவதில் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார். அண்ணாமலைக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. எம்.ஜி.ஆருக்கு நிகரான தலைவராக விஜய்யை மக்கள் பார்க்கிறார்களா என்ற கேள்விக்கு இல்லை என்று 50 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சீமான் வருகிற சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்று 69 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது. வாக்குகள் சிதறும் என்பதால், இது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று கூறுவது தவறு. திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. தவெக வலுவான கூட்டணியை அமைத்தால் 2-வது இடத்தை பிடிக்கும். அதிமுக 2-வது இடத்துக்கு கடுமையாக போராடும். சீமான் 4-வது இடத்தையே பிடிப்பார்.
திமுக 30.62 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 26.39 சதவீத வாக்குகளும், தவெகவுக்கு 21.07 சதவீத வாக்குகளும் பெறும். நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீத வாக்குகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.